06/09/2023
ஒரு 14 வயது சிறுவன் வெறிநாய்கடி பாதிப்பால், தந்தையின் மடியில் உயிரிழக்கும் நிலையில் துடிக்கும் மிகக் கொடூரமாக உள்ள காட்சியினைப் பார்த்தேன்.
சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் உணவு உண்ண மறுத்து, தண்ணீரைக் கண்டால் பயந்து வெறுத்து ஒதுக்கி, வித்தியாசமாக சப்தம் எழுப்பியதால் சந்தேகத்தோடு மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனர்.
பரிசோதனைக்குப் பிறகு 'ரேபிஸ்' வைரஸ் பாதிப்பு கடுமையாக இருப்பதால் காப்பாற்ற முடியாது என்று சொல்லியிருக்கின்றனர். எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளை அணுகி பிழைக்க வைக்க முடியாது என்ற சூழலில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே தந்தையின் மடியில் அந்தச் சிறுவன் இறந்துபோனதாக செய்தி தெரிவிக்கின்றது.
ஏறத்தாழ ஐந்து ஆறு வாரங்களுக்கு முன்பு, பக்கத்து வீட்டு நாய் ஒன்று அந்தச் சிறுவனைக் கடித்திருக்கின்றது. வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என்று அந்தச் சிறுவன் அதை வீட்டில் சொல்லாமல் தவிர்த்திருக்கின்றான். அவனைக் கடித்த நாய் 'ரேபிஸ்' வைரஸ் பாதித்த நாயாக இருந்திருக்கின்றது.
வீட்டில் சொன்னால் திட்டுவார்களே என்கின்ற அச்சமே அந்தச் சிறுவனின் உயிரை மிகக் கொடூரமாக பறித்திருக்கின்றது.
குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது, அவர்களுக்கு எது நிகழ்ந்தாலும், அதில் ஒருவேளை அவர்களின் பிழை இருப்பினும், வீட்டில் தயங்காமல், அச்சமின்றி தெரிவிக்கும் வகையில் வளர்க்க வேண்டும்.
நாய்க்கடி அதுவும் குறிப்பாக தெருவில் சுற்றும் நாய்கள் கடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கவனமாக இருப்பது நல்லது.
முடிந்தவரை அந்த வீடியோ காட்சியைப் (தேடி) பார்க்காதீர்கள். மிகுந்த மன உளைச்சல் தரும் காட்சி.
Shared from ~ Kathir Erode Sir
#வெறிநாய்க்கடி
#குழந்தைவளர்ப்பு